இந்தியா

அறுவைச் சிகிச்சை செய்த பெண் வயிற்றில் கத்தரிகோல் - உறவினர் பதட்டம்

webteam

ஆபரேஷன் முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் ஒருவர் குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்திருந்தார். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு அப்பெண் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அதன்பிறகு அந்தப் பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். 

இதனால் அப்பெண் மறுபடியும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது எக்ஸ்ரே எடுக்கும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை அறிவுறுத்தியுள்ளனர். அந்தப் பெண் எடுத்த எக்ஸ்ரே மூலம் அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது அவரது வயிற்றில் ஒரு கத்தரிகோல் இருப்பது தெரியவந்தது. இது அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவினால் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அப்பெண் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் அந்தப் பெண்ணின் வயிற்றிலுள்ள கத்தரிகோலை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அருகிலுள்ள புஞ்சங்குட்டா காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவமனையின் இயக்குநர் கே.மனோகர் “இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது ”எனத் தெரிவித்தார்.