இந்தியா

“93 வயதில் கேரள சிக்ஸ் பேக் தாத்தா” - கொரோனாவிலிருந்து மீண்ட ரகசியம் இதுதான்

“93 வயதில் கேரள சிக்ஸ் பேக் தாத்தா” - கொரோனாவிலிருந்து மீண்ட ரகசியம் இதுதான்

webteam
93 வயதில், முதியவர் ஒருவர் கொரோனா நோயிலிருந்து மீண்டது எப்படி என்பது குறித்து அவரது உறவினர்கள் சில ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 
உண்மையில் இது ஒரு அதிசயம்தான். ஆச்சரியம்தான். ரஜினி சொன்னதைப் போல அற்புதம்தான். கேரளாவிலுள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 93 வயதான முதியவர் ஒருவர் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்துள்ளார்.
தாமஸ் ஆபிரகாம் மற்றும் அவரது 88 வயதான மனைவி மரியம்மா ஆகிய இருவரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் இத்தாலியிலிருந்து திரும்பிய இவர்களது மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் வழியே இந்தக் கொடிய வைரஸ் இவர்களுக்கும் பரவியது. அதனை எதிர்த்து சில வாரங்களாக மரணப் படுகையில் வாழ்வா? சாவா? என இந்தத் தம்பதி போராடி வந்தது. இந்த முதிய வயதிலும் மனம் தளராமல் இருந்து, அந்த நோயிலிருந்து இருவரும் கடந்த வாரம் முழுமையாகக் குணமடைந்து  மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் பல இளைஞர்களின் உயிரையே பலி வாங்கிய இந்தக் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து இந்தத் தம்பதி தப்பிப் பிழைத்தது அந்த ஊர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவர்கள் நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்ததற்குப் பின்னால் உள்ள ரகசியம்  குறித்துத் தெரிய வந்துள்ளது. இந்தத் தம்பதி இதுநாள் வரை நடத்தி வந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையே நோய்த் தொற்றிலிருந்து மீண்டதற்குக் காரணம் என்று அவர்களின் பேரன் ரிஜோ மோன்சி கூறியுள்ளார். பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ரன்னி பகுதியில் வசித்து வரும் இந்த விவசாயி தாமஸ்,  குடிப்பழக்கம் இல்லாதவர். அதேபோல புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்.  இவர் ஒரு ஆரோக்கியமான நபர் என்று  அவரது பேரன் கூறியுள்ளார். மேலும் இன்னொரு சுவாரஸ்யமான தகவலை அவர் தந்துள்ளார். ‘உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லாமலே, கடின உடல் உழைப்பால் இவர் சிக்ஸ் பேக் உடலை உருவாக்கி வைத்திருந்தார்’ என்றும் கூறியுள்ளார். 
ஆபிரகாம், நோய்த் தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதும் இயற்கை உணவுகளையே அதிகம் உட்கொண்டுள்ளார். கேரளாவின் அடையாளமான பழங்கஞ்சிதான் இவரது பிடித்தமான உணவு என்றும் கூறியுள்ளார்.  வார்டில் சிகிச்சைக்காக இருந்த நாட்களில் அதிகப்படியான பழங்களை உட்கொண்டு வந்துள்ளார் இவர்.
மேலும் இது குறித்து “இவர்கள் தொற்று நோயிலிருந்து தப்பியது ஒரு அதிசயம், மருத்துவர்களும் சுகாதார அதிகாரிகளும் அவர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்” என்று கதிரியக்கவியல் துறையில் இத்தாலியில் பணிபுரியும் பேரன் ரிஜோ கூறியுள்ளார். இவரும் இவரது பெற்றோரும் பல ஆண்டுகளாக இத்தாலியில் வசித்து வருகிறார்கள். “நாங்கள் ஆகஸ்ட்டில் கேரளாவுக்கு வரத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தாத்தா விரைவில் அவரைப் பார்க்க வர வேண்டும் என்று வற்புறுத்தியதால் முன்கூட்டியே வந்தோம் ”என்கிறார் ரிஜோ.