இந்தியா

கேரளாவில் ஒரு கவுண்டமணி கதை... கிழித்து வீசிய லாட்டரிக்கு ரூ.5 லட்சம் பரிசு..!

JustinDurai
கிழித்து வீசியெறிந்த லாட்டரிக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்துள்ளதால் புலம்பித்தவித்து வருகிறார் ஒரு ஆட்டோ டிரைவர்.
‘ராக்காயி கோயில்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கவுண்டமணி ஒரு லாட்டரி சீட்டு வாங்குவார். அதற்கு பரிசு விழுந்ததாக செய்தித்தாளில் பார்த்து செந்தில் சொல்லுவார்.
தான் கையில் வைத்திருக்கும் சவரப்பெட்டியை ஆற்றில் வீசிவிட்டு உற்சாக மிதப்பில் வீட்டுக்கு வந்து, மனைவியிடம் அந்த லாட்டரி சீட்டை கேட்பார்.
லாட்டரியை சவரப்பெட்டியில் பத்திரமாக இருக்கட்டும் என்று வைத்ததாக மனைவி குண்டை தூக்கிப்போட, அந்த பெட்டியை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு வந்ததை சொல்ல… அவ்வளவுதான்… ஏக ரகளையாக அந்த சீன் அமைந்திருக்கும்.
அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது. காசர்கோடு மாவட்டம் செங்களா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. இவர் அருகிலுள்ள நெல்லிக்கட்டை டவுன் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். மன்சூர் அலிக்கு லாட்டரி டிக்கெட் எடுக்கும் பழக்கம் உண்டு.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள அரசின் வின் வின் என்ற லாட்டரியில் 3 டிக்கெட்டுகளை வாங்கினார். இதன் முதல் பரிசு ரூ.60 லட்சம் ஆகும். கடந்த 19ம் தேதி இந்த டிக்கெட்டுக்கான குலுக்கல் நடந்தது. ஆனால், தான் டிக்கெட் எடுத்த விவரத்தை மன்சூர் அலி மறந்துவிட்டார். நேற்று முன்தினம் தான் அவருக்கு லாட்டரி டிக்கெட் எடுத்தது ஞாபகத்திற்கு வந்தது.
ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து ஒரு நியூஸ் பேப்பரை வாங்கி தனக்குப் பரிசு விழுந்துள்ளதா என பார்த்தார். மேலோட்டமாக பார்த்தபோது பரிசு எதுவும் விழவில்லை என கருதினார். இதனால் விரக்தியில் 3 டிக்கெட்டுகளையும் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டார். ஆனால் அதில் ஒரு டிக்கெட்டுக்கு 2வது பரிசான ரூ.5 லட்சம் கிடைத்திருந்தது. அந்த விவரம் மன்சூர் அலிக்கு தெரியாது.
ஆனால் மன்சூர் அலிக்கு 2வது பரிசு 5 லட்சம் கிடைத்ததை லாட்டரி ஏஜென்ட் ராமகிருஷ்ணன் கண்டுபிடித்தார். மன்சூர் அலியை சந்தித்து 5 லட்சம் பரிசு கிடைத்த விவரத்தைக் கூறினார். அதைக்கேட்ட மன்சூர் அலி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக லாட்டரி டிக்கெட் கிழித்து போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது சில துண்டுகள் அங்கேயே கிடந்தன. அதை பொறுக்கி எடுத்து ஒட்ட வைத்தார். பின் காசர்கோடு மாவட்ட லாட்டரி துறை அதிகாரியைச் சந்தித்து விவரத்தைக் கூறினார்.
ஆனால் கிழித்துப் போட்ட லாட்டரி சீட்டுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவு என்றும், மேலும் அந்த லாட்டரி டிக்கெட்டில் உள்ள க்யூ ஆர் கோடு கிடைத்தால் அதை வைத்தும் பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் இதுகுறித்து மேலிடத்தில் பேசி முடிவு சொல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பரிசு வாங்குவதற்கான முயற்சியில் மன்சூர் அலி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.