மகாத்மா pt web
இந்தியா

பெரியார் முதல் நேரு வரை; மகாத்மா காந்தி படுகொலை குறித்து அன்றைய தலைவர்கள் சொன்னதென்ன?

“ஒரு மனிதரின் மரணம் பகைவரைக் கூட நிலைகுலையச் செய்தது எனில், அது காந்தியின் மரணம் மட்டுமாகவே இருக்கும்”

Angeshwar G

“ஒரு மனிதரின் மரணம் பகைவரைக் கூட நிலைகுலையச் செய்தது எனில், அது காந்தியின் மரணம் மட்டுமாகவே இருக்கும்”

காந்தி படுகொலை பத்திரிக்கைப் பதிவுகள் எனும் நூலில் முதல் பக்கத்தின் முதல் வரியாக உள்ளவை இவை. உண்மையில் காந்தியின் மரணம் பகைவரையும் நிலைகுலையச் செய்தது.

mahatma gandhi

மகாத்மா காந்தியின் 77 ஆவது நினைவு நாளான இன்றும், நம் மண்ணிற்கு அவரது தேவை, அவரது படுகொலை குறித்த விவாதங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன. இத்தகைய சூழலில் காந்தியின் 150 ஆவது ஆண்டை ஒட்டி கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருந்த காந்தி படுகொலை பத்திரிக்கை பதிவுகள் எனும் நூல் சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்திருந்தது.

மகாத்மா காந்தியின் படுகொலையின் போது வெளிவந்த பத்திரிக்கை குறிப்புகளை தொகுத்து வெளிவந்துள்ள நூல்.

அதில் சில தலைவர்களின் இரங்கல் குறிப்புகள்:

ஜவஹர்லால் நேரு

1948 பிப்ரவரி; விளக்கு அணைந்தது எனும் தலைப்பில் அமைந்த ஜவஹர்லால் நேருவின் கட்டுரையில் சிறுபகுதி:

நமது தலைவரும் குருவுமாகிய மகாத்மா நமக்கு இட்டுள்ள கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று உறுதிகொள்ள வேண்டும். அவரது ஆத்மா நம்மைப் பார்க்கும் பொழுது நாம் பலாத்காரத்திலோ, அற்பத்தனத்திலோ ஈடுபடுவதாகக் கண்டால் அவருடைய ஆத்மா மிகவும் வருத்தமடையும் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அவருடைய கட்டளையை நிறைவேற்றி நமது ஆபத்துகளை சமாளிக்க வேண்டும்

நாம் ஐக்கியமாயிருக்க வேண்டும். இப்பெரிய விபத்தின் எதிரே நமது கஷ்டங்களையும் சிறு தகராறுகளையும் முடிவுகட்டி விட வேண்டும். ஒரு பெரிய விபத்தானது சிறிய விஷயங்களை மறந்து வாழ்க்கையின் உயரிய விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு அறிகுறி. சிறு விஷயங்களைப் பற்றியே நாம் சமீப காலமாக அதிகமாக யோசனை செய்து வருகிறோம். அவர் தமது மரணத்தின் மூலமாக வாழ்க்கையின் உயரிய விஷயங்களை ஞாபகப்படுத்தியுள்ளார். அழிக்கமுடியாத சத்தியத்தை ஞாபகமூட்டியுள்ளார். அதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் இந்தியாவிற்கு நன்மை ஏற்படும்.

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய சரித்திரபுருஷர் எனும் கட்டுரையில் இருந்து:

மகாத்மா காந்தி தோன்றி இந்தியாவின் சுதந்திரப் பாதையை திறந்துவிட்ட போது அவர் கையில் எவ்விதமான அதிகாரக் கருவியும் இல்லை. எந்தவிதமான அடக்குமுறைச் சக்தியும் கிடையாது. ஆனால், அவருடைய புருஷத்துவத்தில் இருந்து உதயமான சக்தியோ, சங்கீதத்தைப் போல், அழகைப் போல் வருணிக்க முடியாதது. அஃது அந்த சக்தி மற்றவர்களை எளிதில் தன் வசம் ஆட்படுத்திக்கொண்டு விட்டது. ஏனென்றால் அது தன்னையே பிறருக்கு அளிக்குந் தன்மையானது. அப்படி அளிப்பதிலேயே ஒரு சந்தோசத்தையும் அடைகிறது. இதனால் தான் காந்தியடிகளின் அறிவு விஷேசத்தைப் பற்றி இந்தியர்கள் அதிகமாக வற்புறுத்திப் பேசவில்லை. அவருடைய குண விசேஷத்தில் சாத்தியமானது, மிக எளிய தன்மையில் பிரகாசிப்பதையே பெரிதும் பாராட்டுகிறார்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அஞ்சலி

நாகரீக உலகத்தில் ஆங்காங்கு வசிக்கும் அறிஞர்களின் மத்தியில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கானது - ஒழுக்க ரீதியான செல்வாக்கானது - மிருக பலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற இந்த யுகத்தில் ஸ்திரமில்லாததாகத் தோன்றிய போதிலும் எதிர்காலத்தில் ஊர்ஜிதம் பெற்று விளங்கும்..

வல்லபாய் பட்டேல் அஞ்சலிக் குறிப்பு

இன்றைக்கு நடந்த சம்பவம் நாமெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். அவர் உயிரோடு இருக்கும்போது, நாம் அவருடைய புத்திமதிகளைக் கேட்டதில்லை. அவர் இறந்த பிறகாவது அவருடைய புத்திமதிகளைப் பின்பற்றி நடப்போமாக. அப்படி நாம் நடக்காவிட்டால், அது ஒரு பெரிய குறையாகும்.

பெர்னாட் ஷா அஞ்சலிக் குறிப்பு

அளவுக்கு மீறி நல்லவனாயிருப்பது எவ்வளவு ஆபத்து என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அஞ்சலிக் குறிப்பு

நாகரீக உலகத்தில் ஆங்காங்கு வசிக்கும் அறிஞர்களின் மத்தியில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கானது - ஒழுக்க ரீதியான செல்வாக்கானது - மிருக பலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற இந்த யுகத்தில் ஸ்திரமில்லாததாகத் தோன்றிய போதிலும் எதிர்காலத்தில் ஊர்ஜிதம் பெற்று விளங்கும்..

நாம் வசித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்திலேயே நம்மிடையே பிரகாசமான வாழ்க்கையோடு கூடிய ஒரு மகாந்தோன்றியிருக்கிறார். இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

பெரியார்

வட இந்தியாவில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணமாயிருப்பது மதவெறியேயாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்

ம.பொ.சிவஞானம்

கடந்த 300 ஆண்டு அடிமைத்தனத்தில் நாம் அடைந்த வெட்கத்தையும் துக்கத்தையும் காந்தியடிகள் தோன்றிப் போக்கிவிட்டார்.

காந்தியடிகளைக் கொன்ற பாதகத்தால் தோன்றிய வெட்கத்தையும் துக்கத்தையும் போக்குவார் யார்?

காந்தியடிகளின் சேவை இல்லாவிடில் இந்தியா இந்நேரம் எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்த்தால் நமது நெஞ்சு திடுக்கிடுகிறது. காந்தியடிகளைக் கொன்ற சக்தி எது? மக்கள் சக்தியா? இல்லை; மதவெறி. இழக்க விரும்பாத, இழக்கக்கூடாத, இழந்தால் மீண்டும் பெறமுடியாத, பெருஞ்ச் செல்வத்தை இழந்துவிட்டோம்.

சி.என். அண்ணாதுரை

உத்தமர்கள் கோட்சேக்களால் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் உயர்நிலை அடைய, மக்கள் மேன்மையுற, முற்போக்கு பாதையே வேண்டும் - அந்தப்பாதைக்கு, அடையாளக் குறிகளாக, உத்தமர்கள் சிந்திய இரத்தக்கறைகளே உள்ளன

ராஜாஜி

தேசத்தின் பொறுப்பை முழுதும் வகித்திருக்கும் என் சகாக்களுக்கு யார் என்ன சொல்லி ஆறுதல் கொடுக்க முடியும்? குழந்தைகளைப் போல ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதோம். மயானத்தில் வெட்கம் என்னத்துக்கு? துக்கத்துக்கு வேறு பாஷை இல்லை.

அவரைப் பற்றி வருத்தமே வேண்டாம். கண்ணனை ஒரு வேடனுடைய அம்பு கொண்டேகி விட்டது அந்த நாளில், அது போலவே இன்றும் நடந்தது. அந்தகாரத்தில் கிடக்கும் நம்முடைய கதிதான் பரிதாபம். ஏதோ பைத்தியக்காரனைப் போல் கிறுக்கி அனுப்புகிறேன். எனக்குத் துக்கம் பொறுக்கவில்லை. ஒன்றும் பிடிக்கவில்லை...