இந்தியா

`தேசிய பானமா அறிவிங்க...’ - 200-ம் ஆண்டில் கால்பதிக்கும் அசாம் தேயிலை தொழில்!

`தேசிய பானமா அறிவிங்க...’ - 200-ம் ஆண்டில் கால்பதிக்கும் அசாம் தேயிலை தொழில்!

நிவேதா ஜெகராஜா

அசாமை சேர்ந்த பாஜக-வின் மாநிலங்களவை எம்.பி. ஒருவர், டீ-யை தேசிய பானமாக அறிவிக்க வேண்டுமென்று பேசியுள்ளார்.

மாநிலங்களவையின்போது பேசியிருக்கும் எம்.பி பபித்ரா மார்கரிடா, “மக்களின் அன்றாட வாழ்வில் டீ இன்றிமையாததாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும், தங்களின் நாளை டீ-யில் இருந்துதான் தொடங்குகிறார்கள். காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை, எல்லோர் வீட்டின் சமையலறையிலும் டீ இருக்கிறது. ஆகவே அதை நம் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும்.

மேலும் தேயிலை தொழிலாளர்களின் நலனுக்காக தனி நிதி அமைப்பு ஒதுக்கப்பட்ட வேண்டும். ஏனெனில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் தேயிலை தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இதில் அசாம் மாநிலம் மட்டும் 2023-ல் சுமார் 200 ஆண்டுகாலத்தை கடந்துவிட உள்ளது. இதனை கொண்டாட அசாம் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆகவே இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, அசாம் தேயிலை தொழிலுக்கு உந்துதல் கொடுக்கும்படி ஏதாவது செய்யவேண்டும்.

டீ-யில் பல வகைகள் இன்றைய சந்தையில் இருக்கிறது. இது தேயிலை துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றுள்ளார்.

தரவுகள் அளிக்கும் தகவல்களின்படி 2020-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 1,257.52 மில்லியன் கிலோவாகவும், 2020-21 நிதியாண்டில் 1,283 மில்லியன் கிலோவாகவும் இருந்துள்ளது. மே 2022 இல், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 127.11 மில்லியன் கிலோவாக இருந்திருக்கிறது. ஏப்ரல் 2022 இல் 91.77 மில்லியன் கிலோவாக இருந்தது.