இந்தியா

’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்!

’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்!

webteam

அசாமில், தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்ததை அடுத்து, அவர் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். 

அசாமில், புதிய தேசிய குடிமக்கள் பதிவேடு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. பெயர் விடுபட்டிருப்பவர்கள், தாங்கள் இந்தியர்தான் என்பதை ஆதாரத்துடன் தீர்ப்பாயத்தில் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சோனித்புர் மாவட்டத்தைச் சேர்ந்த துலால் பால் என்பவர், பங்களாதேஷ்காரர் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். அவர் குடும்பத்தினர் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இதற்காக சொத்தை விற்று வழக்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் தடுப்பு முகாமில் இருந்த துலால், உடல் நலக்குறைவு காரணமாக, கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், ’அவர் இந்தியர் என்று அறிவித்து சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே அவரது உடலை வாங்குவேன்’ என்று அவர் மகன் ஆசிஷ் கூறியுள்ளார்.

’1960 ஆம் ஆண்டில் இருந்தே எங்களுக்கு இங்கு நிலம் இருக்கிறது. இருந்தாலும் வெளிநாட்டுக்காரர் (பங்களாதேஷ்) என்று கூறி குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறவில்லை. கைது செய்யப்பட்டதில் இருந்தே அவர் மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அவரை, தடுப்பு முகாமில் இருந்து வெளியில் எடுக்க சொத்தை விற்று வழக்கை நடத்தினோம். என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை செய்துவிட்டோம். இருந்தும் அவர் பங்களாதேஷ்காரர் என்றே இறந்திருக்கிறார். அதனால் அவர் உடலை அந்த நாட்டுக்கு அனுப்பிக் கொள்ளட்டும். இந்தியர் என்று சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே நாங்கள் உடலை வாங்குவோம்’ என்றார்.

தடுப்பு முகாமில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் அவர்கள் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.