இந்தியா

உயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்

உயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருக்கும் ஜகன்நாத் கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் யானைகள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு ஜூன் 4 ஆம் தேதி கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்தத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக நான்கு யானைகளை அஸாம் மாநிலத்தில் இருந்து வர வைப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அம்மாநில வனத்துறை அதிகாரிகள் யானைகள் குஜராத் வரை செல்ல தடை விதித்துள்ளனர். இந்தத் தடைக்கு அசாம் மாநிலத்தில் இருக்கும் விலங்குகள் நல அமைப்பினர் கொடுத்த அழுத்தமும் எதிர்ப்புமே காரணமாக இருந்துள்ளது.

ஏன் யானைகள் அனுப்பவில்லை ?

குஜராத்தில் பல்வேறு நகரங்களில் இன்னும் கோடையின் தாக்கம் குறையவில்லை. அசாமில் இருந்து குஜராத்துக்கு 3100 கிலோ மீட்டர் ரயிலில் பயணிக்க வேண்டும். இது யானையின் உடல் நலனையும் குண நலனையும் பெரிதும் பாதிக்கும். மேலும் குஜராத்தின் தட்பவெட்ப சூழ்நிலை, அதற்கு மிகவும் தொந்தரவளிக்கும் மேலும் யானை மிகவும் சோர்வடையும் என விலங்கு நல ஆர்வலர்கள் அசாம் வனத்துறையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாம் முதன்மை வனக் காவலர் ரஞ்ஜனா குப்தா " அசாமில் இருந்து குஜராத் வரை செல்ல முதலில் யானைகளுக்கு அனுமதியளித்தோம். ஆனால், இப்போது அந்த உத்தரவை விலக்கிக்கொண்டோம். விலங்குள் நல அமைப்புகளின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. கடும் வெப்பத்தில் யானைகளால் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பயணப்பட முடியாது" என தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பங்குபெற்றார். ஆனால் இந்தாண்டு அவர் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. கடந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் அசாமில் இருந்து சென்ற மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. எனவே இந்தாண்டும் அதுபோல எவ்வித சம்பவங்களும் நேர்ந்துவிடக் கூடாது என்று பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் குவகாத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன.