இந்தியா

அசாமில் கனமழை வெள்ளம்... இதுவரை 89 பேர் உயிரிழப்பு

அசாமில் கனமழை வெள்ளம்... இதுவரை 89 பேர் உயிரிழப்பு

webteam

அசாமில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 89 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.  

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பிரம்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளமானது நதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி அசாமில் 89 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 26 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக பார்பேட்டா, திப்ருகர், கோக்ராஜர், போங்கைகான், டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வரும் 26,31,343 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2,525 கிராமங்களில் உள்ள 1,15,515.25 ஹெக்டேர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

காசிரெங்கா தேசிய பூங்காவில் வசித்து வந்த 120 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 147 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. பூங்காவிற்குள் தண்ணீர் புகுந்ததால் பல விலங்குகள், மக்கள் பயன்படுத்தும் சாலைகளை கடந்து உயரமான பகுதிகளுக்குச் செல்கின்றன. வெள்ளத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 45,281 நபர்கள் மீட்கப்பட்டு, 391 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மத்திய அரசு அசாம் அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக 346 கோடி ரூபாயை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.