ஹிமந்தா பிஸ்வா சர்மா  ட்விட்டர்
இந்தியா

3 ஆண்டுகளில் அசாம் முதல்வர், அமைச்சர்களின் சொந்த நிகழ்வுகளுக்கு மட்டும் விமானச்செலவு ’58.23 கோடி’!

அசாமில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கான விமானப் பயணத்துக்காக அரசு சார்பில் மொத்தம் ரூ.58.23 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Prakash J

அசாமில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கான விமானப் பயணத்துக்காக அரசு சார்பில் மொத்தம் ரூ.58.23 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அசாமில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் பாஜக 60 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றதன்மூலம் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து, அம்மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார். தற்போது அவரது தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அரசு அரசு சாராத சொந்த மற்றும் வணிக நோக்கத்திற்காக விமானப் பயணங்கள் செய்துள்ளது எனவும், இதற்காக அவ்வரசு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.58.23 (Rs 58,23,07,104) கோடிக்கணக்கில் செலவு செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. குறிப்பாக, பாஜக தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகள், திருமணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் வாடகை விமானங்கள் எடுத்ததன் வாயிலாக இவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த தனி விமான பயணங்களுக்கான செலவுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் மாநில அரசின் நிதியில் இருந்து பல கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 2022 ஆகஸ்ட் 26 அன்று ’தி கிராஸ்கரன்ட்’ என்ற அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதிலில் திருமண விழாக்கள், கட்சி விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தனி விமானம் மூலம் சென்ற அசாம் முதல்வர், அதற்காக மாநில அரசின் நிதியை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

2022 ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த RTI விண்ணப்பத்திற்கு உரிய பதிலளிக்காத நிலையில், மாநிலத் தகவல் ஆணையத்தில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்து, 2023 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சில தகவல்களை மாநில பொதுத் தகவல் அதிகாரி வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், அசாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, அம்மாநில சிவசாகர் சட்டமன்ற உறுப்பினரான அகில் கோகோய் என்பவர், 2021 முதல் 2024 வரை வாடகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பதில் மாநில அரசு செய்த மொத்த செலவினங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: “பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல.. குஜராத் முதல்வராக இருந்த போது..” - ராகுல் விமர்சனம்

அதற்கு அசாம் மாநில பொதுத் துறை அமைச்சர் ரஞ்சீத் குமார் தாஸ், ’முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனிப்பட்ட அல்லது கட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கு விமானப் பயண வசதியைப் பயன்படுத்தவில்லை’ என்றதுடன், "மே 10, 2021 முதல் ஜனவரி 30, 2024 வரை முதல்வர், பிற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் விமானப் பயணத்துக்காக மொத்தம் ரூ.58,23,07,104 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வருடந்தோறும் செலவு செய்யப்பட்ட தொகையையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுதான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், ’மே 10, 2021 முதல் டிசம்பர் 31, 2022 வரை 10,19,81,946 ரூபாயும், 2022-23ஆம் ஆண்டில் 34,01,05,848 ரூபாயும், 2023 ஜன.1 - 2024 ஜன. 30 வரை 14,02,19,313 ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க: மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டிய சொத்து மதிப்பு: ஒரேவருடத்தில் சரிவை மீட்ட கெளதம் அதானி!