இந்தியா

மறக்க முடியாத சிறுவன்... மறந்த தேசிய குடிமக்கள் பதிவேடு...!

webteam

அசாமில் கடந்தாண்டு மார்பளவு நீரில் நின்றுகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய சிறுவனின் பெயர் சமீபத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு புகைப்படத்தை அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மார்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு சிறுவர்கள் இருவர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவார்கள். உடன் அவர்களின் ஆசிரியரும் இருப்பார். இந்தப் புகைப்படம் இந்தியத் தேசிய நாட்டின் மீது சிறுவர்களுக்கு இருந்த மிகப் பெரிய தேசப்பற்றை உணர்த்தியது. பலரும் இந்தப் புகைப்படத்தை அப்போது பகிர்ந்து அந்தச் சிறுவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் அசாமில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில், தேசியக் கொடிக்கு மார்பளவு தண்ணீரில் நின்று கொண்டு மரியாதை செலுத்திய சிறுவனின் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அரசு தயாரித்துள்ளது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேசியக் கொடிக்கு அதிகப்பட்ச உணர்வுடன் மரியாதை செலுத்திய இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனது பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. விடுபட்டிருக்கும் சிறுவனின் பெயர் ஹைதர் கான். அதேசமயம் ஹைதர் கானின் அம்மா, அண்ணன், தாத்தா, தங்கை ஆகியோரின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து ஹைதர் கான் கூறும்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து தனக்கு ஏதும் புரியவில்லை என்றார். தங்கள் பகுதியில் உள்ள படித்த மக்கள் எதை சொல்கிறார்களோ அதைத்தான் தாம் செய்வதாகவும் கூறினார்.

இதுகுறித்து ஹைதர் கானின் பக்கத்து வீட்டுக்காரர் கூறும்போது, “ நீங்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தானே எனப் பலரும் மிரட்டுகின்றனர். உண்மையில் நாங்கள் தேசப்பற்று மிகுந்த இந்தியர்கள். ஹைதர் கானின் பெயர் விரைவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.