இந்தியா

“மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும்” - அசாம் பாஜக எம்.எல்.ஏ

“மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும்” - அசாம் பாஜக எம்.எல்.ஏ

webteam

உலகளவில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பசு சாணம் உதவும் என்று அசாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.

“மாட்டு சாணம் மற்றும் மாட்டு சிறுநீர் குறித்து அரசு ஆராய்ச்சி செய்து வருகிறது. மாட்டு சாணம் எரிக்கப்படும் போது அதிலிருந்து வரும் புகை வைரஸை அழிக்கும் வல்லமை உடையது. அந்த வகையில் மாட்டு சாணம் கொரோனா வைரஸை அழிக்கும் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார் எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா. கால்நடை கடத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது சட்டமன்றத்தில் இதை தெரிவித்தார்.

மேலும், “மத சடங்குகளில் மாட்டு சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்துவதற்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் உண்டு. குஜராத்தில் உள்ள சில மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளாக அவற்றை கொடுக்கின்றன. மாட்டு சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தும் "மாற்று முறையை" பின்பற்றுவதன் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும்.

இந்த முறையை பயன்படுத்தி புற்றுநோய் நோயாளிகள் குணமடைவதை நான் அறிந்து கொண்டேன். அந்த காலத்தில் மக்கள் மாடுகளை வணங்குவதற்கான காரணம் இதுதான். மாடு நமக்கு கொடுக்கும் ஒவ்வொன்றும் முக்கியம். முனிவர்களும் புனிதர்களும் மத சடங்குகளின் போது துளசி இலைகளைப் பயன்படுத்தினர். நீரிழிவு நோயாளிகளுக்கு துளசி இலைகள் ஒரு மருந்து என்று இப்போது நமக்குத் தெரியும். மாட்டு சாணம் மற்றும் மாட்டு சிறுநீரின் பயன் குறித்து பாஜக தலைவரும் அசாமின் நிதியமைச்சருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆராய்ச்சி செய்து வருகிறார்.

திருடப்பட்ட மாடுகளை வைத்திருப்பதற்கு இடம் இல்லாததால் அசாமில் காவல்துறையினர் பெரும்பாலும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றை வைத்திருக்க எங்களுக்கு நிறைய இடம் உள்ளது. ஹஜோவில் உள்ள பசு இருப்புக்கு கால்நடைகளை காவல்துறை அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.

சுமன்ஹரிபிரியா முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிஜோயா சக்ரவர்த்தியின் மகள் ஆவார். அவர் அரசியலில் சேருவதற்கு முன்பு திரைப்படத் தயாரிப்பில் இருந்தார்.