இந்தியா

உண்மைக் கண்டறியும் சோதனைக்கு தயார்: ஆசிபா கொலை வழக்கு குற்றவாளிகள் அதிரடி

உண்மைக் கண்டறியும் சோதனைக்கு தயார்: ஆசிபா கொலை வழக்கு குற்றவாளிகள் அதிரடி

webteam

கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிறார் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று விசாரணை நடைப்பெற்றது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நாங்கள் எந்த குற்றத்தையும் செய்யவில்லை.நார்கோ சோதனைக்கு தயார் என நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து குற்றப்பத்திரிகையை குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குற்றஞ்சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர், 8 பேரும் நார்கோ சோதனைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.

விசாரணை முடிந்து காவல்துறை வாகனத்தில் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய குற்றவாளி ராம், ‘நார்கோ சோதனைக்கு பிறகு எல்லாம் தெளிவாக தெரியும்’என்றார்.
 
நார்கோ சோதனை என்றால் என்ன?

நார்கோ சோதனை உண்மைக் கண்டறியும் சோதனை என்றழைக்கப்படும். இந்தச் சோதனையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடலுக்குள் மயக்க மருந்தை செலுத்தி அவரின் கற்பனைத் திறனை மட்டுப்படுத்தி அவரை அரை மயக்க நிலைக்கு கொண்டுசென்றுவிடுவர். இதன்பின்னர் அவரிடம் இருந்து வாக்குமூலமோ அல்லது வழக்கு குறித்த கேள்விகளோ கேட்கப்படும். வழக்கில் கண்டுபிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிதான் இந்தச் சோதனை.