இந்தியா

'காங். கட்சி முன்பு போல இல்லை' - சோனியாவுக்கு எழுதிய விலகல் கடிதத்தில் அஷ்வனி குமார் வேதனை

'காங். கட்சி முன்பு போல இல்லை' - சோனியாவுக்கு எழுதிய விலகல் கடிதத்தில் அஷ்வனி குமார் வேதனை

ஜா. ஜாக்சன் சிங்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஷ்வனி குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

காங்கிரஸ் கட்சியில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான அஷ்வனி குமார், அக்கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றியவர் ஆவார். மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாநிலங்களவை எம்.பி., மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், மத்திய சட்டத்துறை அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்தவர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த அஷ்வனி குமார், நேற்று கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அந்தக் கடிதத்தில், "காங்கிரஸில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை பார்க்கும்போது கட்சியில் என்னால் இனி தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். அதே சமயத்தில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கொள்கையை அடிப்படையாக கொண்ட தலைமையின் கீழ், கட்சியை தாண்டி என்னால் பல தளங்களில் சேவைபுரிய முடியும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, காங்கிரஸை விட்டு விலகியது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அஷ்வனி குமார், "காங்கிரஸில் இருந்து விலகியது உண்மையிலேயே வலி மிகுந்தது. ஆனால், கட்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சில நடைமுறைகளை பார்க்கையில், கட்சியில் சுயமரியாதையுடன் இனி தொடர முடியும் என எனக்கு தோன்றவில்லை. முன்பு இருந்தது போல காங்கிரஸ் இப்போது இல்லை. கட்சிக்கும், எனக்கும் நிலவும் முரண்பாடுகளை தூக்கி சுமக்கும் அளவுக்கு எனது தோள்களில் வலிமை இல்லை" எனக் கூறினார்.