இந்தியா

கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது முஸ்லிம்கள்தான் - யோகிக்கு ஒவைசி பதிலடி

கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது முஸ்லிம்கள்தான் - யோகிக்கு ஒவைசி பதிலடி

ஜா. ஜாக்சன் சிங்

"கருத்தடை சாதனங்களை முஸ்லிம்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்" என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒவைசி இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் உலக மக்கள்தொகை தொடர்பான அனுமான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 2023-ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது அவர், "நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக, பூர்வக்குடிகள் மத்தியில் மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சமநிலையற்ற மக்கள் தொகை அதிகரிப்பு நல்லதல்ல" எனக் கூறினார்.

இதனிடையே, முஸ்லிம் மதத்தினரை குறிப்பிட்டே யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் பரவலாக கருத்துகள் பகிரப்பட்டன.

இந்த சூழலில், யோகி ஆதித்யநாத் பேச்சு குறித்து அசாதுதின் ஒவைசியிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வியெழுப்பியது.இதற்கு பதிலளித்து ஒவைசி கூறுகையில், "பூர்வக்குடிகளின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறுகிறார். யார் அந்த பூர்வக்குடிகள்? அப்படியென்றால் முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் இல்லையா? உண்மையில் சொல்லப்போனால், திராவிடர்களும் பழங்குடியினர்கள் மட்டுமே இந்தியாவின் பூர்வக்குடிகள். முஸ்லிம்களே அதிக அளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்" என்றார்.