இந்தியா

‘விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள்’ - பாடம் கற்பித்த தைரியசாலி பெண்

‘விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள்’ - பாடம் கற்பித்த தைரியசாலி பெண்

jagadeesh

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், ஆனால் நம்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதில்லை. இது ஒரு ஜனநாயக நாடு. எல்லாவற்றுக்கும் சட்டத்திட்டங்கள் உண்டு. இந்நாட்டில் பிறந்து வாழும் ஒவ்வொருவரும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டே வாழ வேண்டும். இதில் முக்கியமானது சாலை விதிகள். பெரு நகரங்களில் எல்லோருக்கும் ஏதோ ஒரு அவசரம் இருக்கத்தான் செய்கிறது. காலையில் நேரத்துக்கு குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் விட வேண்டும், நேரத்துக்கு அலுவலகம் செல்ல வேண்டும், நமக்கு பிடித்தமான நடிகரின் படத்தை முதலில் இருந்து பார்க்க வேண்டும் என அவசரகதியில் சாலையில் வாகனங்கள் விரட்டிக்கொண்டு இருப்போம்.

சிக்னல் ரெட்டில் இருந்தால் கோட்டை தாண்டிதான் வண்டியை நிறுத்துவோம். பாதசாரிகள் சாலையை கடக்கும்போது சந்தில் புகுந்து போவது என பலரும் தினசரி வாகன விதிகளை மீறிக்கொண்டேதான் இருக்கிறோம். இதில் உச்சக்கட்டம் பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பைக்கை ஓட்டி செல்வது. நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையில் பைக்கை ஓட்டினால் பாதசாரிகள் எங்கே நடப்பார்கள் என்று நாம் கிஞ்சித்தும் யோசித்தது இல்லை. இது பெரு நகரங்களின் அவசரப்போக்கா அல்லது இயந்திர வாழ்க்கையில் நம் உடனே ஒட்டிக்கொண்ட சுயநலமா என்ற சிந்தனை மேலோங்குகிறது.

மகாராஷ்டிராவில் மும்பை போன்று மற்றொரு முக்கியமான தொழில் நகரம் புனே, எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கும் மனிதர்கள் அப்படிதான் நடைபாதையில் பைக்கை செலுத்தி சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். இப்படிதான் கெனால் சாலையில், எஸ்என்டிடி கல்லூரி அருகே இருக்கும் நடைபாதையில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது நிர்மலா கோக்கலே என்ற நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், தனியாக நடைபாதையில் நின்றுக்கொண்டு, அதன் மீது வந்துக்கொண்டிருந்த பைக்குகளை, சாலையில் செல்லும்படி கூறிக்கொண்டு இருந்தார்.

நடைபாதையில் பைக்கில் செல்வோரிடம் நிர்மலா கோக்கலே " நீங்கள் என்னை இடித்து விட்டு செல்வதென்றால் செல்லுங்கள், இல்லை சாலையில் வாகனத்தை ஓட்டுங்கள்" என்றார். நடைபாதையில் முக்கால்வாசி பைக்கை ஓட்டியவர்கள் இளைஞர்கள் என்பதுதான் கவலைதரக் கூடிய விஷயம். நிர்மலா கோக்கலேவின் இந்தச் செயலை பலரும் பாராட்டி ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் அவரது தைரியத்துக்கு தலை வணங்குவதாக தெரிவித்தனர்.