இந்தியா

“ஷாருக்கான் மகனிடம் எவ்வித போதப் பொருளும் இருக்கவில்லை” - ஆர்யன் கான் வழக்கறிஞர்

“ஷாருக்கான் மகனிடம் எவ்வித போதப் பொருளும் இருக்கவில்லை” - ஆர்யன் கான் வழக்கறிஞர்

JustinDurai
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன் கானை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மும்பையிலிருந்து கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
8 பேரிடமும் சுமார் 20 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன் கான் உள்பட 3 பேரை நாளை வரை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.
இன்று ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள போதும் மேலும் விசாரணைக்கு காவலை நீட்டிக்கக் கோரப் போவதில்லை என்று போதைத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆர்யன் கான் போதைப் பொருள் ஏதும் வாங்கவில்லை என்று அவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ஆர்யன் கானின் வழக்கறிஞர் சதிஷ் மனேஷிண்டே, “நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுடன் ஷாருக்கானின் மகனுக்கு எவ்வித தொடரும் இல்லை. அவர் ஒர் விருந்தினராகவே அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதப் பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அவரிடம் இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. எதுவும் கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஆர்யன் கான் நல்ல விதமாகவே நடத்தப்பட்டார்” என்று கூறினார். மகன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த ஷாருக்கான் தனது படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே, வாட்ஸ் அப் உரையாடல் சிலவற்றை அவர் டெலிட் செய்தது தொடர்பாகவே ஆர்யன் கானிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அந்த உரையாடல்கள் போதைப் பொருள் தொடர்பானதாக இருக்கக் கூடும் என்பதாகவும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.