சுனிதா, அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர்
இந்தியா

‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - வாட்ஸ் அப் எண்ணுடன் பரப்புரையை ஆரம்பித்தார் சுனிதா! அடுத்த ராப்ரிதேவி?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்குமாறு அவரது மனைவி சுனிதா, 'கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்' என்ற புதிய பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.

Prakash J

விசாரணைக் காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டார். பின்னர், மார்ச் 27ஆம் தேதியுடன் விசாரணைக் காவல் நிறைவடைந்த நிலையில், கெஜ்ரிவால் மீண்டும் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், ”நான் 4 அறிக்கைகளில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறேன். அதன்படி பல்வேறு சாட்சிகளையும் அமலாக்கத்துறை விசாரணை செய்துள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு உள்ளேன். நான் கைது செய்யப்படுவதற்கு இந்த ஆவணங்கள் மட்டும் போதுமா” எனப் பதில் அளித்திருந்தார்.

அதேநேரத்தில் அமலாக்கத் துறை, “அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சரியாக பதில் அளிப்பதில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் நிதிசார்ந்த பரிவர்த்தனை தொடர்பான கேள்விகளுக்குக்கூட அவர் முறையாகப் பதிலளிக்கவில்லை. எனவே மேலும் 7 நாட்கள் விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக் காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அவருக்கு ஏப்ரல் 1 வரை விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உபியின் காட்ஃபாதர்: பிரபல கேங்ஸ்டர் முக்தர் அன்சாரி சிறையில் திடீர் மரணம்.. பதற்றத்தில் மாநிலம்!

அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க மனைவி சுனிதா வீடியோ வெளியீடு!

முன்னதாக, சிறையில் இருந்தவாறே அரவிந்த் கெஜ்ரிவால், துறைரீதியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்குமாறு அவரது மனைவி சுனிதா, 'கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்' என்ற புதிய பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சுனிதா வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர். நாட்டில் உள்ள மிகவும் ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்குச் சவால் விடுத்துள்ளார். இன்றிலிருந்து ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்ற ஓர் இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம். மக்கள் தங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவரை ஆதரிக்க வேண்டும். 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலம் நீங்கள் உங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என அதில் தெரிவித்துள்ளார். அதை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருகிணைப்பாளர் அவருக்கு தெரிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பெங்களூரு: பறிபோன ஐ.டி. வேலை.. ஹாஸ்டல்களில் லேப்டாப்களைத் திருடி பல லட்சம் சம்பாதித்த நொய்டா பெண்!

’சுனிதா ராப்ரிதேவியாக மாறுவார்’ - பாஜக கருத்து

இந்த நிலையில் இன்று டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "தற்போது கெஜ்ரிவாலுக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளது. இப்போது கெஜ்ரிவால் மனைவி சுனிதா தலைமைப் பதவிக்கு தயாராகி வருகிறார். கெஜ்ரிவாலும், அவரது மனைவியும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்கள். பீகாரில் ராப்ரி தேவி செய்ததுபோல் தனது கணவரின் பதவியை வகிக்க கெஜ்ரிவால் மனைவி சுனிதா தயாராகி வருகிறார்" என்றார்.

முன்னதாக, ’ராப்ரி தேவியின் அடிச்சுவடுகளைச் சுனிதாவும் பின்பற்றலாம்’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சூசகமாகத் தெரிவித்திருந்தார். "லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் சிக்கியபோது, ​​ராப்ரி தேவி அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் அவர் படிப்படியாக நாற்காலியைப் பிடித்தார்" என அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, 1997ஆம் ஆண்டு பீகார் முதல்வராக ராப்ரி தேவி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”இது சட்டவிரோதமானது” - ரூ.1,800 கோடி அபராதம்.. காங்கிரஸுக்கு மேலும்மேலும் அடி தரும் வருமானவரி துறை!