அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர்
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு.. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை. அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றம் அவருடைய நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Prakash J

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்று (மே 7) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தாம் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ’கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இன்னும் நாங்கள் பதில் அளித்து முடிக்கவில்லை. எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: மலேசிய கால்பந்து வீரர் மீது ‘ஆசிட் வீச்சு’ - ஒரே வாரத்தில் இரண்டாவது கால்பந்து வீரர் மீது தாக்குதல்!

அதேசமயம், ’ஒட்டுமொத்த நாடும் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்த வழக்கில் நான் எதுவும் குறிக்கிடாமல் இருந்து வருகிறேன்’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இப்படி, இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை

கெஜ்ரிவால் தொடர்பான வழக்கு நாளை மறுதினம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை வருகிற 20ஆம் தேதிவரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் முடிவடைவதாக இருந்த நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’உங்க வீட்டு கலவை மெஷின் சத்தம் தொந்தரவா இருக்கு’ - சச்சினுக்கு எதிரா புகார் சொன்ன நபர்! வைரல்பதிவு!