இந்தியா

"மணிஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் பழிவாங்கப்படுகின்றனர்"- அரவிந்த் கெஜ்ரிவால்

"மணிஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் பழிவாங்கப்படுகின்றனர்"- அரவிந்த் கெஜ்ரிவால்

webteam

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறையினர் டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர்.

டெல்லியில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு வகையான முறைகேடுகள் நடந்ததாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து மூன்று முறைக்கு மேல் மணிஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியனர். இந்நிலையில் சிசோடியாவின் தனிசெயலர் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். எப்பொழுது வேண்டுமானாலும் மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார் 

ஒரு வாரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை நடைபெற்ற நிலையில், தற்பொழுது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிசோடியா. வரும் 20ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்டமாக அமலாக்கத்துறையினர் மணிஷ் சிசோடியாவை கைதுசெய்ய திட்டமிட்டிருக்கின்றனர். முன்னதாக திகார் சிறையில் உள்ள அவரிடம் இன்றையதினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவருடைய நேரடி உதவியாளரிடமும் முறைகேட்டில் மணிஷ் சிசோடியா பங்களிப்பு குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்ததற்காக மணிஷ் சிசோடியா, மற்றொரு அமைச்சரான சத்தியேந்திர ஜெயினும் பழிவாங்கப்படுகின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார் 

ஏற்கனவே ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இன்றைய தினம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மணிஷ் சிசோடியா மீது வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விசாரணை நடத்தப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு அனைத்தையும் தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.