இந்தியா

“காங்கிரஸுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள்; ஏனெனில்.. ”-கோவாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

“காங்கிரஸுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள்; ஏனெனில்.. ”-கோவாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

webteam

"காங்கிரஸுக்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்" என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், கடந்த தேர்தலில் நூலிழையில் நழுவவிட்ட ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸும் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன. பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், கோவா தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளை மாறி மாறி பார்த்து சலித்து போன பெரும்பாலான கோவா மக்கள், இந்த முறை ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

இந்த சூழலில், மாநிலத் தேர்தல் நிலவரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அர்விந்த் கெஜ்ரிவால் இன்று காலை பேட்டியளித்தார். அதில் அவர், "கோவாவில் எங்கு பார்த்தாலும் ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவு அலை வீசுகிறது. மக்களுக்கு ஒன்றே ஒன்றினைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நேர்மையான ஆட்சி மாநிலத்தில் அமைய வேண்டும் என விரும்பினால் நீங்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். ஊழல் ஆட்சி தொடர விரும்பினால், பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஆனால் காங்கிரஸுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள். அவ்வாறு காங்கிரஸுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள் என்றால், அது மறைமுகமாக பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது தான்.

ஏனெனில், தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பிறகு பாஜகவில் இணைந்து விடுவார்கள். 2017-ம் ஆண்டு பேரவைத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு மாறியதை மக்கள் மறக்கக் கூடாது. எனவே காங்கிரஸுக்கு வாக்களித்து மீண்டும் அதே தவறினை செய்து விடாதீர்கள்" என அவர் கூறினார்.