இந்தியா

“கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை; ராணுவத்தை அனுப்புங்கள்” - டெல்லி முதல்வர்

“கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை; ராணுவத்தை அனுப்புங்கள்” - டெல்லி முதல்வர்

webteam

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இருவேறு பேரணியில் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 3-ஆவது நாளாக நேற்றும் வன்முறைகள் தொடர்ந்தன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரே நாளில் 3 முறை ஆலோசனைகள் நடத்தினார்.

இதில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது டெல்லியில் அமைதி திரும்ப அனைத்து கட்சிகளும் உதவ வேண்டும் என அமித் ஷா கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் டெல்லி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கான சிறப்பு ஆணையராக சிஆர்பிஎஃப்பை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என்.ஸ்ரீவஸ்தவாவை உள்துறை அமைச்சகம் நியமித்தது.

இந்நிலையில் டெல்லி கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ராணுவத்தை களம் இறக்க வேண்டுமென்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.