பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 20 நாட்களில் ஊழலை ஒழித்து விட்டதாக ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் பகவத் மான் பொறுப்பேற்றதற்குப் பின் ஊழலில்லா மாநிலத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற 20 நாட்களிலேயே தங்களால் ஊழலை ஒழிக்க முடிந்த நிலையில், 75 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகள் ஏன் அதனைச் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார். தாங்கள் நேர்மையாக இருப்பதால் ஊழலை ஒழிக்க முடிந்ததாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டக்களத்தில் உதயமான ஆம் ஆத்மி இயக்கம், ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாறியது 2012-ம் ஆண்டில்தான். அதன் பிறகு ஒரே ஆண்டிலேயே தலைநகர் டெல்லியை கைப்பற்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் வந்த வேகத்திலேயே ஆட்சியில் இருந்து ஆம் ஆத்மி அகன்றது. டெல்லியில் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 'ஜன் லோக்பால்' அமைப்பை உருவாக்கும் தனது முயற்சி தோல்வி அடைந்ததால், அதிரடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால். 'அரசியல் அனுபவமில்லாத ஒரு முன்னாள் அரசு அதிகாரியிடம் ஆட்சியை கொடுத்தால் இப்படிதான் நடக்கும்' என அந்த சமயத்தில் நாடே முணுமுணுத்தது. ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து இன்று டெல்லி மட்டுமன்றி பஞ்சாப்பிலும் கோட்டை அமைத்துள்ளது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி!