இந்தியா

`ரூபாய் நோட்டில் லட்சுமி - விநாயகர் படங்கள்’ பிரதமருக்கு கடிதம் எழுதிய கெஜ்ரிவால்!

`ரூபாய் நோட்டில் லட்சுமி - விநாயகர் படங்கள்’ பிரதமருக்கு கடிதம் எழுதிய கெஜ்ரிவால்!

webteam

“இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை உடனடியாக அச்சிட வேண்டும்; இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

130 கோடி இந்தியர்கள் சார்பில் மகாத்மா காந்தியுடன் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தையும் இந்திய ரூபாயில் அச்சிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “130 கோடி மக்கள் இந்திய நாணயத்தின் ஒருபுறம் காந்தியின் படமும், மறுபுறம் விநாயகர் மற்றும் லட்சுமியின் படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்று நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் வளரும் மற்றும் ஏழை நாடாகவே இந்தியா உள்ளது. இன்றும் நம் நாட்டில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள்... ஒருபுறம் நாட்டு மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

மறுபுறம் நமது முயற்சிகள் பயனளிக்கும் சரியான கொள்கை மற்றும் கண்டிப்பாக இருக்க கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு தேவை. கடின உழைப்பும், இறைவனின் ஆசியும் சங்கமித்தால்தான் நாடு முன்னேறும். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இதை நான் பகிரங்கமாக கூறினேன். இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் அமோக ஆதரவு உள்ளது மக்கள் மத்தியில் அபிரிமிதமான உற்சாகம் உள்ளது. இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அனைவர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கருத்தை தெரிவித்த உடனேயே தேர்தல் வந்த உடன் அரவிந்த் கெஜ்ரிவால் இந்துவாக மாறுவதாக பா.ஜ.க. விமர்சனம் செய்தது. அதே நேரத்தில் ரூபாய் நோட்டில் இயேசு, முகமது நபி உள்ளிட்டோர் படங்களையும் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. ஒரு பக்கம் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.