இந்தியா

டெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்..!

டெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்..!

webteam

டெல்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க உதவுங்கள் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதேவேளையில் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது. இதனால் வேறுவேறு கருத்து மாறுபாடுகள் கொண்டவர்கள் ஒரே சமயத்தில் குழுமியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள கலவரத்தை தடுக்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் போராட்ட சம்பவம் சம்பந்தமான நிறைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் வன்முறைக்காரகள் பல வாகனங்களை எரிப்பது, கற்களைக் கொண்டு தாக்குவது, பொதுச்சொத்துகளுக்கு தீவைப்பது எனப் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதனைக்கண்ட கெஜ்ரிவால் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியிலுள்ள சில பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை நான் மனதார வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் ட்வீட்டிற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் பதிலளித்துள்ளார். அவர், “வடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய டெல்லி காவல்துறை அறிவுறுத்தப்பட்டது. நிலைமைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அனைவரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.