இரவு கொரோனா உறுதியாகி அதிகாலையில் உயிரிழந்த டெல்லி இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் வீட்டிற்குச் இன்று சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் டெல்லி திணறிக்கொண்டிருந்தது. மருத்துவர்களின் உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. டெல்லியில் முன்களத்தில் பணியாற்றி வந்தவர் மருத்துவக் கல்லூரி மாணவரான 26 வயது அனாஸ் முஜாகித். டெல்லி அரசு குரு தேவ் பகதூர் மருத்துவமனையில் அவர் பணியாற்றி வந்தார்.
இவர், கொரோனா நோயாளிகளிடையே பணியாற்றி வந்ததால், வீட்டில் தங்கியிருக்காமல், தனியார் ஹோட்டலில் தங்கி வந்துள்ளார். ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில், சக மருத்துவ நண்பருடன் தனது வீட்டுக்கு சென்று இப்தார் கொண்டியுள்ளார். மீண்டும் ஹோட்டலுக்கு வரும் வழியில், காய்ச்சல் இருந்ததால், அனாஸுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது மயங்கி விழுந்துள்ளார் அனாஸ்.
தலை மற்றும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனாஸுக்கு இரவு 8 மணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 3 மணிக்கு அனாஸ் உயிரிழந்துவிட்டார். இந்த இளம் மருத்துவரின் மரணம் இந்திய மக்களின் இதயத்தில் கண்ணீர் வரவைத்தது.
இந்நிலையில், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனாஸ் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார், இதுகுறித்து அனாஸ் தந்தை பேசும்போது, ”எனது மகன் தனது கடைமையில் இருக்கும்போது உயிரிழந்தான். எனது மற்ற பிள்ளைகளும் நாட்டிற்காக சேவை செய்வார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.