அதிஷி, சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி| முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆட்சியமைக்க உரிமை கோரிய அதிஷி!

Prakash J

மதுபானக் கொள்கை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு, நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு நீதிமன்றம், ”முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது; கோப்புகளில் கையெழுத்திடக்கூடா” எனச் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்தச் சூழலில், ”மக்கள் என்னை நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதலமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன். 48 மணி நேரத்தில் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

டெல்லி அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதில், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்ய மற்ற எம்.ஏல்.ஏக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். மேலும், அடுத்த தேர்தல்வரை கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டதத்தைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்குப் பின்னர் பல விவாதங்களிலும் ஆத் ஆத்மி கட்சியின் முகமாகத் தோன்றி வலுவான வாதங்களை முன்வைத்ததன்மூலம் அதிஷி அனைவருக்கும் அறிமுகமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மருத்துவர்கள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய அரசு.. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால், புதிய முதலமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர், “இன்றைய நாள் டெல்லிக்கு மிகவும் சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் டெல்லி முதல்வராக்கப்படுகிறார். அதிஷி குடும்பத்தை பொறுத்தவரை அப்சல் ஒரு நிரபராதி. மேலும், அப்சல் குரு மீதானது அரசியல் சதியால் போடப்பட்ட பொய் வழக்கு. அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். கடவுள்தான் டெல்லியை காப்பாற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே, அக்கட்சி எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்வாதி மாலிவாலின் இத்தகைய விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆம் ஆத்மி, எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு அவரை வலியுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் சமயத்தில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவாலைச் சந்திக்கச் சென்றபோது அவரின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக ஸ்வாதி மாலிவால் புகாரளித்ததும், பின்னர் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.