இந்தியா

ட்ரம்ப் மனைவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு..!

ட்ரம்ப் மனைவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு..!

jagadeesh

டெல்லி அரசுப்பள்ளியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

24ஆம் தேதி இந்தியா வரும் ட்ரம்ப், அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது ட்ரம்ப்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவான்கா மற்றும் அவரது கணவரும் ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகருமான ஜெரெட் குஷ்னர் ஆகியோர் வருகை தர இருக்கின்றனர்.

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மகிழ்ச்சி வகுப்பை பார்வையிடவுள்ள மெலானியாவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பதாக இருந்தது. மெலானியாவுக்கு பள்ளி முழுவதையும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுற்றி காண்பிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில், மெலானியாவின் நிகழ்ச்சியி்ல் பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர், துணை முதல்வர் முதலமைச்சர் பங்கேற்பது சரியாக இருக்காது என அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், மத்திய அரசின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் ஆம் ஆத்மிக்கு எழுந்துள்ளது. ஆனால், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மெலானியா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது என்பதை அமெரிக்கா தூதரகமே முடிவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.