செய்தியாளர்: ராஜிவ்
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அதிகாரிகள் அனுமதி கோரினர். சிறப்பு நீதிபதி காவேரி Baweja முன் விசாரணை நடைபெற்றநிலையில், 2021-22 ல், டெல்லி கலால் கொள்கையை அமல்படுத்தியபோது, தென்மாநில குழுமம் ஒன்றிடம் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாப் தேர்தலில் போட்டியிட அந்த நிறுவனத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் கோரப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கோவா தேர்தலில் போட்டியிட 4 ஹவாலா வழிகள் மூலம் 45 கோடி ரூபாய் பெற்றதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சிகளின் செல்போன் அழைப்பு விவரங்கள் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முக்கியமான சதிகாரர் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லி முதலமைச்சரை கைது செய்ய எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அமலாக்கத்துறையே நீதிபதியாகவும், நீதியை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும் மாறிவிட்டதாக கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி வாதிட்டார்.
இதற்கிடையே பஞ்சாப், ஹரியானா ஆம் ஆத்மி கட்சியினர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குருக்ஷேத்ராவில் உள்ள ஹரியானா முதலமைச்சர் நயீப் சிங் சைனியின் இல்லத்தை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட முயன்ற அவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கலைத்தனர் சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினரும், இந்தியா கூட்டணி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.