இந்தியா

“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம்

“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம்

webteam

விஜய் மல்லையா நாட்டை விட்டுச் செல்லும் முன் தன்னை சந்தித்ததாக கூறுவது தவறான தகவல் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

பல்வேறு வங்கிகளில் பணம் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையாவை, இந்தியாவிற்கு அழைத்துவர மத்திய அரசு தீவிர முயற்சி செய்துவருகிறது. இதற்காக இந்திய அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை தற்போது லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வந்து மும்பை சிறையில் வைத்து விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பிரிட்டன் மனித உரிமைகள் ஆணையம் வரையறையின் படி, மும்பை சிறை இருக்கிறதா என்பது குறித்து நீதிபதி விசாரித்து வருகிறார். 

இதற்காக இந்திய அதிகாரிகள் சமர்பித்துள்ள மும்பை சிறை வீடியோவை லண்டன் நீதிபதி ஆய்வு செய்து வருகிறார். இதனிடையே உணவு இடைவேளையில் வெளியே வந்த மல்லையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, 2016ம் ஆண்டு நாட்டை விட்டுச் செல்லும் போது நிதியமைச்சரை சந்தித்து கடன் பிரச்னையை சரி செய்வதாக கூறியதாக தெரிவித்தார். ஆனால் நிதியமைச்சரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும் அப்போது அருண்ஜெட்லி தான் நிதியமைச்சராக இருந்தார். இதனால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அருண் ஜெட்லி, மல்லையா தவறான தகவலை கூறுவதாக தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் தன்னை சந்திப்பதற்கு மல்லையாவிற்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மல்லையா, நாடாளுமன்றத்தில் ஜெட்லியை சந்தித்தாக கூறியுள்ளார். ஆனால் அது அதிகாரப்பூர்வற்ற சந்திப்பு என்றும், லண்டன் செல்வதை ஜெட்லியிடம் கூறியதாகவும் மல்லையா தெரிவித்துள்ளார்.