பெட்ரோல் மற்றும் டீசலுக்கான உற்பத்தி வரிக் குறைக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைமுகமாக கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை குறைக்கும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் அரசுக்கான வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும் பட்சத்தில், முக்கிய வருவாய் ஆதாரமாக பெட்ரோல், டீசல் வரிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை மாறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ள ஆலோசனையை நடைமுறைப்படுத்தினால் நாடு மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கும் எனவும் ஜெட்லி குறிப்பிட்டார்.