இந்திய ராணுவ வீரர்களின் உடலை சிதைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு நிச்சயம் பதிலடி உண்டு என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் நேற்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் தொடுத்தது. இதில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற மற்றொரு வீரர் படுகாயமடைந்தார்.
பின்னர் உடல்களை கைப்பற்றியபோது, பரம்ஜித் சிங், பிரேம் சாகர் ஆகியோரின் தலையை துண்டித்து உடல்களை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம் நடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்திய வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 8 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் 250 மீட்டர் தூரத்துக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்த வெறித்தனத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, இது காட்டுமிராண்டித்தனமானது என்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு சரியான பதிலடி தரப்படும் என்றும் கூறியுள்ளார். வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு பழிவாங்கும் வகையில், அதேபோல அந்நாட்டு ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி., ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஸ்ரீநகருக்கு விரைந்துள்ள ராணுவத் தளபதி பிபின் ராவத், ராணுவ உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் இந்திய வீரர்களின் தலையை துண்டிக்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் மறுத்திருக்கிறது. அதன் செய்திப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 2 இந்திய வீரர்களின் தலையை துண்டித்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்று கூறப்பட்டுள்ளது.