இந்தியா

கூகுள் மேப்பில் தெரியும் பிரம்மாண்ட சத்ரபதி சிவாஜி ரங்கோலி

webteam

மகாராஷ்டிர மாநிலத்தில் போடப்பட்ட சத்ரபதி சிவாஜியின் ரங்கோலி ஓவியம் ஒன்று கூகுள் மேப்பில் வழியே அப்படியே தெரியும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


மகாராஷ்டிர மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் ஜெய்ந்தியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் லத்தூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள நிலங்கா கிராமத்தில் சத்ரபதி சிவாஜியின் தோற்றம் ரங்கோலி ஓவியமாக தீட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி இக்கிராமத்தில் 2.4 லட்சம் சதுர அடி அளவில் 6 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய ரங்கோலி ஓவியம் ஒன்று போடப்பட்டது. இதனை ரங்கோலி கலைஞர் மங்கேஷ் நிபானிக்கர் வரைந்தார். 

இந்த ரங்கோலி ஓவியம் பிப்ரவரி மாதமே வரையப்பட்டிருந்தாலும் தற்போது இந்தப் படம் கூகுள் மேப்பில் தேடினால் தெரிகிறது. அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறது. அதன்படி கூகுள் மேப்பில் செயற்கைகோள் பார்வைக்கு (Satellite View) மாற்றி ‘சத்ரபதி ஸ்ரீ சிவாஜி மகாராஜ் ஃபார்ம் பெயிண்டிங்’ அல்லது ‘சத்ரபதி சிவாஜி மகராஜ் கிராஸ் போட்டோ ஃபார்ம்’ என்று டைப் செய்தால் இந்தச் சிவாஜி ரங்கோலி ஓவியம் அச்சு அசல் அப்படியே தெரிகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்து மக்கள் இந்த ரங்கோலியை பாராட்டி வருகின்றனர். இந்த ரங்கோலியை அமைத்த கலைஞர் நிபானிக்கர், “சென்ற வருடம் சிவாஜி ஜெயந்திக்கு ஒரு பெரிய ரங்கோலியை உருவாக்கினோம். இந்த வருடம் சற்று வித்தியாசமாக வறட்சி பாதித்த மரத்வாடா பகுதியில் பச்சை நிறத்தில் சிவாஜி ரங்கோலியை போட திட்டமிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.