டெல்லியில் உள்ள மாசு அளவைக் குறைக்க தேசிய தலைநகர் பிராந்தியத்தில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு டெல்லி அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) என்பது, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் சில மாவட்டங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, ஹரியானாவின் ஃபரிதாபாத், உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் போன்றவற்றைச் சொல்லலாம். இந்த தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள காற்று மாசு காரணமாக பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. காற்று மாசை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்ற வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான், டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், காற்று மாசுபாடுகளைக் குறைக்க செயற்கை மழைப்பொழிவை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியின் காற்று மாசுபாடுகளைக் குறித்தும், காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி, இதற்கு முன் மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும் நினைவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டெல்லியில் காற்று மாசை குறைப்பது எப்படி என்பது குறித்து நாங்கள் பல நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். செயற்கை மழை மட்டுமே காற்று மாசில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி. பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டியது அவரது தார்மீகப் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னையை தீர்க்க அவசரக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு வலியுறுத்திய அவர், அந்த கூட்டத்தில் டெல்லி அரசு, செயற்கை மழைப் பொழிவு குறித்து ஆலோசனை நடத்திய ஐஐடி கான்பூர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஆலோசனைக்கு அழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.