இந்தியா

“ஜவஹர்லால் நேருவின் காஷ்மீர் கொள்கையே தவறானது” - அருண் ஜெட்லி

“ஜவஹர்லால் நேருவின் காஷ்மீர் கொள்கையே தவறானது” - அருண் ஜெட்லி

webteam

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான நேருவின் கொள்கைகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துகள் அங்கு வாங்கமுடியாது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் அரசு பூர்வக்குடி மக்களுக்கு மட்டும் சில சிறப்பு உரிமைகளை, அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதனை இந்திய அரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 35ஏ இன் வாயிலாக வழங்கியுள்ளது. அதன்படி ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் பிற மாநில மக்கள் நிலங்கள் மற்றும் சொத்துகளை வாங்க முடியாது என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 35ஏ ஜம்மு-காஷ்மீர் பொருளாதாரத்தை அதிகம் பாதித்துள்ளது. இதனை ஜவஹர்லால் நேரு 1954ஆம் ஆண்டு அவசர அவசரமாக குடியரசுத் தலைவரின் ஆணையாக அரசியலமைப்பு சட்டத்தில் இணைத்துவிட்டார். இதை வைத்து ஜம்மு-காஷ்மீர் அரசு அங்கு வசிக்கும் பிற மாநில மக்களின் உரிமைகளில் தடைகள் விதிக்கிறது. அதேபோல ஜம்மு-காஷ்மீர் மாநில பெண்கள் வெளி மாநிலத்தவரை திருமணம் செய்தால் அவர்களும் ஜம்மு-காஷ்மீரில் சொத்துகள் மற்றும் நிலங்கள் வாங்க முடியாது.

இத்தகைய விதிமுறைகளால் ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகள் சரியாக வருவதில்லை. அத்துடன் அங்கு தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் அங்கு திறக்கப்படுவதில்லை. ஆகவே ஜம்மு-காஷ்மீரில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளும் சரியாக செயல்படவில்லை. ஏனென்றால் அங்கு பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அதனால் ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் ஜம்மு- காஷ்மீர் ஜனநாயக கட்சி ஆகியவை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.