நித்யானந்தா வெளிநாட்டில் இருந்தால் அவரைக் கைது செய்து இந்தியா கொண்டுவரத் தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவரின் மகள் சங்கீதா. இவர் நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார். சங்கீதா கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டிய ஜான்சிராணி, அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் நித்யானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் சீடர் ஆர்த்திராவ் என்பவரும் மனு அளித்திருந்தார்.
இவ்விரு மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நித்யானந்தாவை நாடு கடத்துவதற்கு அயல்நாட்டு சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள, கர்நாடக அரசு கோரிக்கை விடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசு முறைப்படி கோரிக்கை விடுத்தால், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும், வெளியுறவுத்துறை மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.