பழுதான இரு சக்கர வாகனங்கள் pt web
இந்தியா

விஜயவாடா: வீடுகளைச் சூறையாடிச் சென்ற கிருஷ்ணா நதி.. சுமார் 10 லட்சம் இருசக்கர வாகனங்கள் சேதம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிப்போட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான வாகனங்கள் பழுதாகியுள்ளன.

PT WEB

ஆந்திராவில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த சமயத்தில், கிருஷ்ணா, குண்டூர், என்டிஆர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் கனமழை பெய்தது. இதனால் பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்தன. இவை ஒருபுறம் இருக்க விஜயவாடா ஒரு படி மேலே போய் இதுவரை சந்தித்திராத பேரழிவை சந்தித்துள்ளது. கிருஷ்ணா நதியில் எத்தனை லட்சம் கன அடி நீர் வெளியேறுகிறது என்று மக்கள் அறிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களின் வீட்டை சூறையாடிவிட்டு சென்றது வெள்ளம்.

கிருஷ்ணா நதியில் இதுவரையில் இல்லாத அளவாக வினாடிக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு வினாடிக்கு இவ்வளவு தண்ணீர் பாய்ந்த நிலையில் ஆற்றங்கரை ஓரம் இருக்கும் விஜயவாடா தப்ப முடியுமா?

விஜயவாடாவில் கிருஷ்ணா நதியோரம் இருந்த பகுதிகளில் சுமார் 10 அடிக்கு வெள்ளம் சூழ்ந்தது. விஜயவாடா நகருக்குள் செல்லும் புடமேறு கால்வாயிலும் ஆயிரக்கணக்கான கனஅடி வெள்ளம் பாய்ந்தது. வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த இருசக்கர வாகனங்கள் மட்டும் சுமார் 10 லட்சம் இருக்கும் என்று கூறுகிறார் விஜயவாடாவில் மெக்கானிக் தொழில் செய்து வரும் அப்துல் ரசாக்.

அவர் கூறுகையில், “விஜயவாடாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு, மூன்று இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. அத்தனையும் இந்த வெள்ளத்தில் வீணாகியிருக்கின்றன. மொத்தம் 10 லட்சம் அல்லது அதற்கு மேலான இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருக்கும்” என தெரிவித்தார்.

வெள்ளம் மெல்ல வடிந்து வரும் நிலையில், தண்ணீரில் மூழ்கிக்கிடந்த வாகனங்களை எடுத்துக்கொண்டு மக்கள் மெக்கானிக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.