இந்தியா

குடியரசு தினத்தில் ராணுவப் பெண் வீரர்களின் மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள்!

குடியரசு தினத்தில் ராணுவப் பெண் வீரர்களின் மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள்!

webteam

நாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற, ராணுவ அணிவகுப்பு மரியாதையில், ராணுவத்தில் பணியாற்றும் மகளிர் அதிகளவில் கலந்து கொண்டனர். இதில் 144 ஆண்கள் கொண்ட ஒரு ராணுவப் பிரிவை தனி ஒரு பெண் முன் நின்று வழிநடத்தியது காண்போர் அனைவரையும் வியக்க வைத்தது. அவருடைய பெயர் லெஃப்டினண்ட் பாவனா கஸ்தூரி.

முதன் முறையாக ஆண்கள் அதிகம் கொண்ட ஒரு ராணுவப் பிரிவை தனி ஒரு பெண்ணாக இருந்து முன் நின்று வழிநடத்தினார்.இதன் மூலம் வரலாற்றில் ஒரு தனி முத்திரை பதித்து விட்டார், 26 வயதேயான பாவனா. திருமணமான, ஹைதராபாத்தை சேர்ந்த இவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், நடனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கார்கில் பகுதியில், பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாது, மேலும் பல பெண்கள், இந்த குடியரசு தின விழாவில் முத்திரை பதித்துள்ளனர். குறிப்பாக,  அஸ்ஸாம் ரைஃபில்ஸில் உள்ள பெண்கள் அடங்கிய, ராணுவக் குழு நிகழ்த்திய சாகச அணிவகுப்பு நடத்தினர். இது அங்கு வந்திருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்ததாக அமைந்திருந்தது.  இந்த ராணுவக் குழுவை வழிநடத்தியவர், மேஜர் குஷ்பூ கன்வார். 30 வயது நிரம்பிய, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், பஸ் கன்டக்டரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.

மேலும் 9 இரு சக்கர வாகனங்களின் மீது 33 ஆண்கள் கொண்ட ’டேர்டெவில்’ என்ற குழுவை முன்னின்று வழி நடத்தி சென்று சாகசத்தை நிகழ்த்தினார்கள். இந்த குழுவை வழிநடத்தியவர், கேப்டன் சிகா சுரபி என்ற ராணுவப் பெண். அதுமட்டுமின்றி மேலும் இவர், ஒரு பெரிய இரு சக்கர வாகனத்தை தன்னந்தனியாக இரண்டு கைகளையும் விட்டு, ராணுவ மரியாதை செலுத்தியதும், காண்போரை கவர்ந்தது.

இவ்வளவு நாள் ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து, பின் ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த சாகசங்களின் வழியாக, ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைவரும் காணும்படி வெளிப்படுத்தியுள்ளார்கள். ராணுவத்தில் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும், நம் இந்திய பெண்கள் தங்களுக்கென புதிய தடம் பதித்துவிட்டார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.  

வீடியோ: