ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 குண்டுகளை உடலில் வாங்கி காயமடைந்த ஜூம் என்ற மோப்ப நாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் டாங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் மறைந்து இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தததையடுத்து அவர்கள் அங்கு விரைந்தனர். அவர்களுடன் ஜூம் என்ற பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ மோப்ப நாயும் சென்றிருந்தது.
அப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் ராணுவ மோப்ப நாய் ஜூம் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தது. இதையடுத்து அந்த நாய் அட்வான்ஸ் பீல்ட் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மோப்ப நாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அந்த நாய் இன்று மதியம் 12 மணி அளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விழுந்து உயிரிழந்தது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் நாயின் மீது இரண்டு முறை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. முன்னதாக பயங்கரவாத வேட்டையில் திறம்பட செயல்பட்ட ராணுவ மோப்ப நாய் ஜூம் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை ராணுவத்தின் சினார் கார்ஸ் பிரிவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.