ஒடிசா எக்ஸ் தளம்
இந்தியா

ஒடிசா|ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவல் துறையினர் 5பேர் சஸ்பெண்ட்

ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை, காவல் நிலையத்திலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் காவல் துறையினர் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Prakash J

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள பரத்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று, நள்ளிரவு 1 மணியளவில், தனது உணவகத்தை மூடிவிட்டு ராணுவ அதிகாரியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார், தாக்குதலுக்கு ஆளான அந்தப் பெண். இவர், அந்த ராணுவ அதிகாரியை திருமணம் செய்ய உள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அந்தப் பெண்ணை சில இளைஞர்கள் துரத்திச் சென்று தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பரத்பூர் காவல் நிலையத்திற்கு அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது, புகாரைப் பதிவு செய்து ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு உதவுவதற்குப் பதிலாக போலீசார் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகவும், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 10 மணிநேரம் கழித்து ராணுவ உயரதிகாரிகள் தலையிட்டபிறகு அந்த அதிகாரி விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது வருங்கால மனைவி காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இதையும் படிக்க: திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!

செப்டம்பர் 18-ஆம் தேதியன்று கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்த ஒடிசா உயர்நீதிமன்றம், அவருக்கு உடனடி ஜாமீன் வழங்க ஒப்புதல் அளித்தது. புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது. எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையும், அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது. அந்தப் பெண் இதுகுறித்து வெளியில் தெரிவித்த பின்பே, இந்த விவகாரம் ஒடிசாவில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வகையில், ஸ்டேஷன் இன்சார்ஜ் தீன் கிருஷ்ண மிஷ்ரா, சப் இன்ஸ்பெக்டர் வைஷாலினி பாண்டா, உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் ஷைல்மயி சாஹு, சாகரிகா ரத் மற்றும் கான்ஸ்டபிள் பல்ராம் ஹன்ஸ்தா ஆகியோர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அந்த காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் ஒடிசாவில் அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவிர. இந்த விவகாரத்தில் நீதித்துறை விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ”இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்று முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க; ”இங்க ஆள் இல்ல பாருங்க..”|வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!