இந்தியா

கேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..!

கேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..!

rajakannan

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர். அனைத்தரப்பு மீட்புப்படைகளையும் மிஞ்சும் வகையில் கேரள மீனவர்கள் களத்தில் இறங்கி அசத்தினர்.

மீட்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை ராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. மீட்பு பணிகளின் போது அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. பொதுவாகவே, ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வு என்பதே அவ்வளவு எளிதில் இருக்காது. அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த மாநிலத்திற்கு சென்றவர், நேராக வீட்டிற்கு செல்லாமல் முழுவீச்சில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தனது சொந்த மாநிலம் இப்படியொரு பேரிடரில் ஆட்பட்டிருக்கும் போது ஒரு ராணுவ வீரர் எப்படி வீட்டில் உறவினர்களுடன் ஓய்வு எடுப்பார். கேரளாவின் செங்கனூர் பகுதியைச் சேர்ந்த மஜ் ஹேமந்த் ராஜ் தான் அந்த ராணுவ வீரர். இவர் ஜெய்ப்பூரில் உள்ள சப்த சக்தி கமாண்டோ தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தனது சொந்தமாநிலமாக கேரளாவிற்கு கடந்த வாரம் புறப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவர் இன்னும் வீட்டிற்கு செல்லாமல் மக்களோடு, மக்களாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

செங்கனூர் பகுதியில் தான் மேற்கொண்ட மீட்புப் பணிகள் குறித்து ராணுவ வீரர் ஹேமந்த் ராஜ் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஹேமந்த் ராஜ் பேசுகையில், “ஆகஸ்ட் 18ம் தேதி கொச்சி செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கேரளாவில் மழை வெள்ளத்தின் கோர தாண்டவ காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தேன். நான் செல்லவிருந்த கொச்சி விமானமும் ரத்து ஆனது. என்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள் நிவாரண முகாம்களில் இருப்பதை அறிந்து கொண்டேன். என்னுடைய கிராமமும் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. 

அதன்பிறகு கேரளா செல்லும் ஏதேனும் ஒரு விமானத்தில் என்னை ஏற்றுவிடுங்கள் என்று வலியுறுத்தினேன். எப்படியோ ஒரு வழியாக டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தேன். பின்னர், அங்கிருந்து ஐஏஎஃப் ஏர் கிராப்ட் மூலம் செங்கனூர் வந்தடைந்தேன். நான் ராணுவ சீருடையில் இருந்த நேரத்தில், விடுமுறையில் இருந்த சில வீரர்கள் என்னை அணுகினார்கள். நாங்கள் 5 அல்லது 6 பேர் சேர்ந்து ஒரு குழுவை அமைத்துக் கொண்டோம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் எங்களது டீமில் இருந்தார்கள். சில சமூக ஆர்வலர்களும் இருந்தனர். 

எல்லோரும் சேர்ந்து உள்ளூர் மீனவர்களிடம் இருந்து சில படகுகளை பெற்றோம். அதன் மூலம் மீட்புப் பணிகளை தொடங்கினோம். பணிகள் நடக்க, நடக்க எங்களின் குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 30 பேர் வரை எங்களுடன் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டனர். இந்த உதவியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக செய்யவில்லை. எந்த ராணுவ அதிகாரியும் உதவி செய்யுமாறு என்னிடம் கேட்கவில்லை. எனினும் நாங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் என்பதால், எங்களால் உதவிட முடியும் என எங்களுக்கு தெரியும். அதேபோல், உள்ளூரில் நான் மிகவும் பழக்கப்பட்டவன் என்பதும் எனக்கு உதவியாக இருந்தது.

சுமார் 7 நாட்களுக்கு தூக்கமே இல்லாமல் ஒரு கட்டுப்பாட்டு அறையை இயக்கினோம். இதில் மாணவர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களுக்கு எண்ணிற்கு உதவிகேட்டு போன் செய்தார்கள். மாணவர்கள் மட்டும் உதவவில்லை என்றால் எங்களால் அந்த கட்டுப்பாட்டு மையத்தை இயக்கி இருக்க முடியாது. அவர்கள் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டார்கள். உள்ளூர் பகுதி மாணவர்கள் என்பதால் எந்த இடம் என்பதை உடனடியாக புரிந்து கொண்டு சொன்னார்கள். மாணவர்கள் சொல்ல சொல்ல களத்தில் நாங்கள் பணிகளை மேற்கொண்டோம்” என்றார். 

வீட்டில் உள்ளவர்களை சென்று பார்த்தீர்களா என்று கேள்விக்கு, “ஓணம் பண்டிகைக்கு ஒரு சர்பரைஸ் பயணமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால், எனது வீட்டிற்கு இன்னும் நான் செல்லவில்லை. வெள்ளப் பெருக்கு தற்போது குறைந்து புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. என்னுடைய பணிகள் தற்போது இங்கு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது” என்றார். 

நூற்றுக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர் ஹேமந்த் ராஜின் பணியை பாராட்டி ராஜஸ்தான் பாதுகாப்பு அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டுள்ளது.