கடும் பனிப்பொழிவால் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவித்த கர்ப்பிணியை இந்திய ராணுவத்தினர் 4 கி.மீ தூக்கிச்சென்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஷமினா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழிநெடுக கடும் பனிப்பொழிவால், வெள்ளை நிற பனிக்கட்டிகள் நிரம்பியிருந்தன. உதவியின்றி தவித்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, இந்திய ராணுவத்தினர் உதவிக்கரம் நீட்டினர். சுமார் 100 ராணுவ வீரர்கள் சேர்ந்து அப்பெண்ணை சுமார் 4 கி.மீ தூரம் வரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளதாக ராணுவ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் இந்த தியாகத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவரது பதிவில், “நமது ராணுவத்தினரின் வீரம், தொழில் தர்மத்தை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, நமது ராணுவம் என்பது மனித நேயத்திற்காகவும் மிகுந்த மரியாதை செய்யப்படுகிறார்கள். மக்களுக்கு எந்த இடத்தில் உதவி தேவைப்பட்டாலும், நமது ராணுவம் அங்கு சென்று, எதையுமே முடியும் என செய்து முடிக்கின்றனர். நமது ராணுவத்திற்காக பெருமை அடைகிறேன். தாய் ஷமினாவும், குழந்தையும் ஆரோக்யமாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.