இந்தியா

குப்வாரா மற்றும் பாரமுல்லாவை பார்வையிட்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு

குப்வாரா மற்றும் பாரமுல்லாவை பார்வையிட்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு

webteam

ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியை ராணுவ உயர் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவிவந்தது.

மேலும் கடந்த 1 ஆம் தேதி குப்வாராவின் பபகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் இந்தச் சண்டை நடைபெற்றது. 

இந்தத் தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், பொதுமக்கள் தரப்பிலும் ஒருவர் பலியானார். அதேபோல், பயங்கரவாதிகள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. காயமடைந்த சில பயங்கரவாதிகள், சேதமடைந்த கட்டடங்களில் ஒளிந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியை ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். இதில் ராணுவ வடக்குப் படைத் தளபதி ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும் சினார் கார்ப்ஸ் படை தளபதி ஜென்ரல் கே.ஜி.எஸ். தில்லான் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்கள் அங்கு தற்போது நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தனர். அத்துடன் அங்குப்  பணியிலுள்ள ராணுவ வீரர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.