ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் கிராமத்தில் இந்திய ராணுவ வாகனம் மீது ஐ.இ.டி ரக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. இந்தத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். தாக்குதல் நடந்த உடன் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம், கடந்த பிப்ரவரி மாதம் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டத்தில் இடத்தில் இருந்து 27 கிமீ தொலைவில் தான் உள்ளது.
முன்னதாக, புல்வாமாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் தகவல் தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தானும் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தது.