இந்தியா

இன்று காஷ்மீர் செல்கிறார் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்

webteam

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின்பு ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று அங்கு செல்கிறார். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 6ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து அங்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அத்துடன் காஷ்மீர் பகுதியில் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அங்கு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின்பு முதன்முறையாக ராணுவப் படை தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் செல்கிறார். அவர் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளையும் பிபின் ராவத் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே ஜம்மு- காஷ்மீரின் நிலைமை குறித்து அறிய மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக அங்கு செல்வர் என்றும், அமைச்சரவை செயலர் இதற்கான பணிகளை கவனிப்பார் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வளர்ச்சித் திட்டங்கள் அதற்கான நிதி உள்ளிட்டவைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.