இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எல்லைப் பாதுகாப்பு குறித்து 3 நாட்கள் லடாக்கில் ஆய்வு நடத்த உள்ளார்.
இந்தியா - பூட்டான் - சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய எல்லை பகுதிகளான ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 5 என்ற இரண்டு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவினர். ஆனால் இந்திய ராணுவத்தினர் துரிதமாக செயல்பட்டு, மனிதச்சுவர் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், லடாக் பகுதியில் இந்திய நிலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஞாயிற்றுக்கிழமை லடாக் செல்ல உள்ளார். அவர், மூன்று நாட்கள் அங்கு தங்கி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.