இந்தியா

இவ்வளவு மோசமான க்ராபிக்ஸா? வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! VFX நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

இவ்வளவு மோசமான க்ராபிக்ஸா? வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! VFX நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

ச. முத்துகிருஷ்ணன்

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசரை அயோத்தியில் இருந்து படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசர், ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பாகுபலி - பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே இணையத்தில் யுத்தம் நிகழ்ந்த அந்த தருணத்தில், லாட்டரி டிக்கெட்டாக சிக்கியது ஆதிபுருஷ் டீசர். பொம்மை படத்திற்கு இவ்வளவு கோடி பட்ஜெட்டா என்று நெட்டிசன்கள் டீசரை அங்குலம் அங்குலமாக விமர்சிக்க துவங்கினர்

அவ்வாறு எழும்பிய விமர்சனங்களுக்கு சிஜி மற்றும் VFX நிறுவனங்களும் தப்பவில்லை. “NY VFXwalla” என்ற நிறுவனம் கோடிகளில் பணத்தைப் பெற்று ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள NY VFXwalla நிறுவனம் தாங்கள் ஆதிபுருஷ் படத்தில் சிஜி/VFX பணிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முன்னணி VFX ஸ்டுடியோ நிறுவனமான NY VFXwalla ஆதிபுருஷின் CG/ஸ்பெஷல் எஃபெக்ட்களில் வேலை செய்யவில்லை என்று தெளிவுபடுத்துகிறோம். ஒரு சில ஊடகவியலாளர்கள் எங்களிடம் கேட்டதால், நாங்கள் இதைப் பதிவு செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.