கடந்த ஞாயிறு அன்று பிரதமர் நரேந்திர மோடியால் சென்ட்ரல் விஸ்டாவின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டடமானது திறக்கப்பட்டது. 64,500 சதுர மீட்டர் அளவில் 1,280 பேர் அமரும் வசதியுடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், உண்மையில் ஒரு கலைப்படைப்பாகவும் விளங்கிறது.
முக்கோண வடிவை போன்று அமையப் பெற்ற இந்த நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை, மைய அரங்கம், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கான அலுவலகங்கள், எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான விசாலமான அறைகள், உணவு அருந்தும் பகுதி, மிகவும் விசாலமான வாகன நிறுத்துமிடம், 6 கமிட்டி அறைகள், அமைச்சரவையின் பயன்பாட்டுக்காக 92 அறைகள் என பல வசதிகள் உள்ளன.
இத்தகைய பெருமை வாய்ந்த புதிய நாடாளுமன்றத்தை வடிவமைத்த கலைஞர் யாராக இருக்கக்கூடும்? இங்கே அறிவோம்...
புதிய நாடாளுமன்றத்தை கட்டியமைத்த பெருமை அகமதாபாத்தில் உள்ள HCP டிசைன்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் பிமல் ஹஸ்முக் படேலையே சாரும்.
இந்த HCP நிறுவனமானது, இதற்கு முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் அணைக்கட்டு, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரை மேம்படுத்துதல், மேலும் பூரி ஜகன்நாதர் கோவிலின் கட்டட மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றில் தங்களை இணைத்துக்கொண்டதுடன், ஐஐடி ஜோத்பூரின் கட்டடக்கலை வடிவமைப்பு போன்ற திட்டங்களுக்கு பின்னாலும் இருந்தது. இவை அனைத்துக்கும் பின்னே, பிமல் படேலின் உழைப்பு மிக முக்கிய பங்காற்றுகிறது.
இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டியது போல அமைந்துள்ளது இந்த செண்ட்ரல் விஸ்டா மறு உருவாக்கத்திட்டம்.
இவர் 1961 ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அகமதாபாத்தில் பிறந்தவர். கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் முதுகலைப்பட்டத்தையும், 1995 பிஎச்டி பட்டத்தையும் பெற்றவர். 2012 முதல் CEPT பல்கலைக்கழகத்தில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
நாடாளுமன்ற கட்டடத்தை தான்தான் வடிவமைக்கப்போகிறோம் என தெரிந்தபின், தேசத்தின் வளர்ச்சி முன்னேற்றத்தை பறைசாற்றும் பொருட்டு இக்கட்டடத்தை உருவாக்கவேண்டும் என்று லட்சியம் கொண்டாராம் பிமல் ஹஸ்முக் படேல்! “இக்கட்டடம் இந்தியபெருமைகளை தாங்கி Raising India என்ற அந்தஸ்தை பெற்றிருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவரேவும் கூறியிருக்கிறார்.
முக்கோண வடிவத்தை பெற்று கட்டப்பட்ட இத்தகைய அமைப்பை பற்றி ஒரு பேட்டியில் பேசிய பிமல் படேல், “இதற்குள் மக்களவை, மாநிலங்களவை மற்றும் ஒரு மைய ஓய்வறை போன்ற முக்கிய மூன்று முக்கிய இடங்கள் இருப்பதால் இக்கட்டடமானது முக்கோண வடிவை பெற்று இருக்கிறது.
ஸ்ரீ சக்கரம் போன்ற முக்கோண அமைப்பை பெற்ற இக்கட்டடமானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் காணப்படும் புனித வடிவவியலாக முக்கோணம் இருக்கிறது.பிமல் ஹஸ்முக் படேல்
இத்தகைய பெருமை வாய்ந்த நமது பாராளுமன்ற கட்டடத்தை நாம் பார்க்கும்பொழுது நாம் யார், நம் கடந்த காலம் என்ன, நாம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்" என்று கூறி இருக்கிறார்.
பல விருதுகளை வென்றவரான பிமல் படேல், 2019 இல் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். இக்கட்டடம் கட்டுவதற்காக 229.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.