இந்தியா

“என்ன...என்னோட அக்கவுண்ட்ல ரூ1. கோடி இருக்கா!” ஷாக் ஆன கூலித் தொழிலாளி

“என்ன...என்னோட அக்கவுண்ட்ல ரூ1. கோடி இருக்கா!” ஷாக் ஆன கூலித் தொழிலாளி

JustinDurai

தனது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி இருப்பதும் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தனக்கு தெரியாது என்கிறார் கூலித் தொழிலாளி. 

உடனடி கடன் பயன்பாட்டு வழக்குகளை விசாரிக்கவும், ஊழலுடன் தொடர்புடைய பல்வேறு தனிநபர் கணக்குகளின் சுயவிவரங்களை ஆய்வு செய்யவும் தெலுங்கானா போலீசார் டெல்லி சென்று சிலரது வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, அவரிடம் பாஸ் புத்தகம், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட வங்கிக் கணக்கு தொடர்பான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. ஆனால் அவரது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி இருப்பு இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட கூலித் தொழிலாளரின் வங்கிக் கணக்கை ஆன்லைனில் லோன் ஆப் நடத்திவந்த சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவரது வங்கிக் கணக்கை ஆன்லைன் லோன் ஆப் மோசடி அல்லது ஆன்லைன் சூதாட்ட மோசடிக்காக பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தினக்கூலி தொழிலாளரின் விவரங்களைப் பயன்படுத்தி, ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக மாதந்தோறும் ரூ.4,000 பெற்று வந்துள்ளார். ஆனால் தனது கணக்கில் ரூ.1 கோடி இருப்பதும் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதும் அவருக்கு தெரியவில்லை. தனது பெயரில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களைப் பற்றி எங்களிடம் சொல்ல அவர் பயந்தார். தனது வங்கிக் கணக்கை கையாளுபவர்களிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுகிறார். இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி, இதற்கு விரிவான விசாரணை தேவைப்படுகிறது’’ என்றனர்.