இந்தியா

பாஜக எம்.பிக்கு எதிராக ஆபாச பேச்சு! - அசம் கானுக்கு சபாநாயகர் எச்சரிக்கை 

webteam

பாரதிய ஜனதா எம்.பி ரமா தேவிக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான், வரும் திங்கள் அன்று மக்களவை சபாநாயகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பாரதிய ஜனதா எம்.பி ரமா தேவி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேச எழுந்த சமாஜ்வாதி எம்.பி. அசம் கான், ஆபாசமான முறையில் ரமா தேவி குறித்து கருத்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிற உறுப்பினர்கள், தரக்குறைவாக பேசியதற்காக அசம் கான் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். எனினும் தனது கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்றும் எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் அசம் கான் தெரிவித்தார். 

இதையடுத்து அவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வரும் திங்கள் அன்று பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அசம் கானுக்கு உத்தரவிட்டுள்ளார். அவையின் இந்த முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.