இந்தியா

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

webteam

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்காக நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டு, 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது.

குற்றவாளிகளில் 6 பேரில், முதன்மைக் குற்றவாளியான ராம்சிங், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம், திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். 18 வயதுக்கு குறைவான குற்றவாளிக்கு சிரார் நீதிமன்றத்தில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங், அக்‌ஷய் தாகூர், வினய் ஷர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையைக் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்தனர்.

ஆனால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தண்டனைகளை வலுவாக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.